மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் மீதான வழக்கு தொடர்பில் விசாரணை தீவிரம்!

 மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர்.

இதனால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 7ஆம் திகதி 'அவிஷ்க புத்தா' என்ற பலநாள் மீன்பிடிப் படகு, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் 355 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.


அந்தப் படகில் இருந்த ஐந்து இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, குறித்த மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் அண்மையில் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.

எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மாலைத்தீவு சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post
சாட்டை - Tamil News Website | Tamil News Paper | Tamil News Online | Breaking News
video/Video

Contact Form