பீகார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் வாழ்க்கைப் பாதையையும் அவருடைய அரசியல் முக்கியத்துவத்தையும் குறித்துப் பார்க்கலாம்.
பீகாரின் பக்தியார்பூரில் 1951இல் ஓர் எளிய குடும்பத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியில் பிறந்த நிதிஷ் குமார் அடிப்படையில், ஒரு பொறியாளர். எலக்ட்ரிகல் இன்ஞினியரிங் முடித்து மின் வாரியத்தில் அரசுப் பணியில் இருந்த நிதிஷ் வாழ்வை அரசியலுக்கு திருப்பியது ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின் சிந்தனைகள். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஜெயப்ரகாஷ் நாராயணன் முன்னெடுத்த ‘முழுப் புரட்சி’ இயக்கத்தில் பங்கேற்றவர் தொடர்ந்து, மிகுந்த அரசியல் ஆர்வத்தால், வேலையை உதறிவிட்டு அரசியலுக்குள் வந்துவிட்டார்.
நிதிஷும் லாலுவும் நெருக்கமான நண்பர்கள். ஆனால், லாலுவைப் போல வசீகரமான பேச்சாளர் அல்லது ஆர்ப்பாட்டமான செயல்பாட்டாளர் என்று நிதிஷைச் சொல்ல முடியாது. அமைதியாக செயலாற்றும் காரியகர்த்தா. தேர்தல் களமும் தோல்வியைத்தான் தந்தது. மனைவி ஊக்கசக்தியாக இருந்தார். மனைவியின் நகைகளை விற்று ஒரு தேர்தலைச் சந்தித்தார். பல சமயங்களில் செலவுக்கு தள்ளாடும் சூழல் நிதிஷுக்கு இருந்தது. அரசுப் பணியில் இருந்த மனைவியின் வருமானம்தான் ஊன்றுகோலாய் இருந்தது. ஆனால், நேர ஒழுங்கைப் பராமரிக்கும், திட்டமிட்டு செயலாற்றும் நிதிஷின் கடும் உழைப்பும், நெகிழ்வான அணுகுமுறையும் அவரை அடுத்தடுத்து இடங்களுக்கு உயர்த்தின.
பிகாரின் சோஷலிஸ இயக்கமும், ஜனதா கட்சியும்தான் நிதிஷின் அடையாளங்கள். லாலுவோடு இணைந்து செயல்பட்டதோடு, லாலுவுக்கு பக்க பலமாகவும் இருந்த நிதிஷ், பீகார் முதல்வராக லாலு பொறுப்பேற்றதும் ஆட்சியில் அவருடைய யாதவ் சமூகம் பெரிய அளவில் ஆக்கிரமித்ததையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் கேள்விக்குள்ளாக்கி கட்சியிலிருந்து வெளியேறினார். சகா ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடன் இணைந்து ஆரம்பித்த தனி கட்சி பெரும் தோல்வியையே தந்தது. இதற்கு பிறகுதான் லாலு - காங்கிரஸை எதிர்கொள்ள பாஜகவோடு கை கோத்தார் நிதிஷ். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பாஜகவோடு நிதிஷ் உறவில் உள்ளபோதும், மத நல்லிணக்கம் சார்ந்து நிதிஷ் மீது பெரிய விமர்சனங்கள் கிடையாது. எல்லோரையும் அரவணைப்பவர் என்பதே அவரது அடையாளமாக இருக்கிறது. சாதி ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், மக்கள்தொகை அளவில் சிறிய சமூகம் ஒன்றிலிருந்து வந்த நிதிஷ் எல்லோரையும் அரவணைப்பதன் வாயிலாகவே தொடர்ந்து ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார்.

